Sunday, March 31, 2013

எங்க‌ள் வீட்டில் "பூத்த‌"ப் பூக்க‌ள் ‍ - 2



க‌டைக்குச் சென்று, ஈஸ்ட‌ரை முன்னிட்டு க‌டை மூடியிருந்த‌தால், தெருவில் உதிர்ந்து இருந்த‌ ம‌ல‌ர்க‌ளை நானும் தீஷுவும் அள்ளி வ‌ந்தோம்.

எடுக்கும் பொழுதே கொலாஜ் செய்ய‌லாம் என்று நினைத்திருந்தேன். நாங்க‌ள் முன்பே செய்திருந்த‌ கான்டாக்ட் பேப்ப‌ர்(contact paper) கொலாஜ் செய்தோம். கான்டாக்ட் பேப்ப‌ர் என்று Shelf lining ஸெக்ஷ‌னில் க‌டைக‌ளில் கிடைக்கும். ஸெல்லோ டேப் போன்று ஒரு ப‌க்க‌ம் ஒட்டும் த‌ன்மை உடைய‌து. ஒட்டும் ப‌குதி ந‌ம்மை நோக்கி இருக்கும் ப‌டி வைத்து ஒரு கண்ணாடி க‌த‌வில் டேப்பில் வைத்து ஒட்டிவிட்டோம். ஒவ்வொரு இத‌ழ்க‌ளாக‌ தீஷு ஒட்ட‌த் துவ‌ங்கினாள். சாதார‌ண பாலிதீன் பேப்ப‌ரில் கூட‌ செய்ய‌லாம். ஆனால் ஒவ்வொரு இத‌ழிலும் கோந்து ஒட்டி ஒட்ட‌ வேண்டும்.  

இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளில் தீஷு செய்வ‌தில் எவ்வ‌ள‌வு நேர்ந்தியாகி இருக்கிறாள் என்று பார்க்கும் பொழுது ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கிற‌து.     




Thursday, March 28, 2013

குழ‌ந்தைக‌ள் சீட்டு விளையாட‌லாமா?

சீட்டுக்க‌ட்டுக்கும் என‌க்கும் நெருங்கிய‌ ப‌ந்த‌ம் உண்டு. என் உற‌வின‌ர்க‌ளுட‌ன் இர‌வு முழுவ‌தும் விளையாடும் வ‌ழ‌க்க‌ம் இப்பொழுதும் உண்டு. காசு வைத்து விளையாடும் ப‌ழ‌க்க‌ம் இல்லை. ஆனாலும் அலுக்காம‌ல் ச‌ளைக்காம‌ல் ஏழு முத‌ல் எட்டு ம‌ணி வ‌ரை விளையாடுவோம். அத‌னால் தீஷுவிற்கு சீட்டு ப‌ழ‌க்குவ‌தில் எந்த ஒரு த‌ய‌க்க‌மும் இல்லை.


சீட்டுக்கட்டை குழ‌ந்தைக‌ளுக்கு க‌ணித‌ம் க‌ற்றுக் கொடுக்க‌ உப‌யோக‌ப்ப‌டுத்த‌லாம். கீழ்க்க‌ண்ட‌ வ‌ழிக‌ளில் நானும் தீஷுவும் விளையாண்டு / க‌ணித‌ம் க‌ற்று இருக்கிறோம். இர‌ண்டு வ‌ய‌து முத‌ல் விளையாட‌லாம். Ace, King, Queen, Jack போன்ற‌ பட‌ அட்டைகள் வைத்தோ இல்லாமலோ விளையாட‌லாம்.

1. Sorting : இர‌ண்டு க‌ப்க‌ள் எடுத்துக் கொள்ள‌வும். சீட்டுக்கட்டை க‌லைத்துக் கொள்ள‌வும். 10 அட்டைகள் எடுத்துக் கொள்ள‌வும் ( வ‌ய‌துக்கேற்ப‌ கூட்டியோ குறைத்தோ கொள்ள‌லாம்). அட்டைக‌ள் முக‌ம‌திப்பு தெரியாம‌ல் திருப்பி இருக்க‌ வேண்டும். ஒவ்வொரு அட்டைக‌ளாக‌ எடுத்து, க‌றுப்பு அட்டையை ஒரு க‌ப்பில் போட‌ சொல்ல‌வும், சிவ‌ப்பு அட்டையை ஒரு க‌ப்பில் போட‌ சொல்ல‌வும். இது க‌ணிதத்தின் அடிப்ப‌டையான Sorting.
2. Advanced Sorting : நிற‌த்தின் அடிப்ப‌டையில் பிரிக்க‌ப் ப‌ழ‌கிய‌வுட‌ன், நிற‌ம் ம‌ற்றும் பெய‌ர்க‌ளின் அடிப்ப‌டையில் பிரிக்க‌ வைக்கலாம். கேட்க‌ எளிதாக‌ தோன்றினாலும் க‌டின‌மான‌து.

3. Patterning : இந்த விளையாட்டிற்கு குழ‌ந்தைக‌ளின் வ‌ய‌திற்கு ஏற்ப 10 முத‌ல் 20 அட்டைக‌ள் வ‌ரை எடுத்துக் கொள்ள‌வும். அட்டைக‌ளின் ம‌திப்பு தெரிய‌ வேண்டும். ஒரு க‌றுப்பு ஒரு சிவ‌ப்பு என்று மாறி மாறி வைக்க‌ வேண்டும்.

4. Advanced Patterning: வ‌ண்ண‌ங்க‌ளின் அடிப்ப‌டையில் பாட்ட‌னிங் ப‌ழ‌கிய‌வுட‌ன், வ‌ண்ண‌ம் ம‌ற்றும் பெய‌ர்க‌ளின் அடிப்ப‌டையில் செய்ய‌லாம். 

5. எண்க‌ள் க‌ற்ற‌ல்: 1 முத‌ல் 9 வ‌ரை ஒரு பூ அட்டைக‌ள் ம‌ட்டும் எடுத்துக் கொள்ள‌வும். குழ‌ந்தையை ப‌த்து அடி த‌ள்ளி நிற்க வைக்க‌வும். நிற்கும் இட‌த்திலிருந்து குழ‌ந்தைக்கு அட்டையைக் காட்டினால் வாசிக்க‌த் தெரிய‌ வேண்டும். ஒரு அட்டையை எடுத்து குழ‌ந்தையிட‌ம் காட்ட‌வும். எண்ணை ச‌ரியாக‌ வாசித்தால் ஒரு அடி முன்னால் வ‌ர‌ வேண்டும். த‌வ‌றாக‌ வாசித்தால் ஒரு அடி பின்னால் சென்று விட‌ வேண்டும். இவ்வாறு வாசித்துக் கொண்டே ந‌ம்மிட‌ம் வ‌ரும் பொழுது முத்த‌மோ அல்ல‌து ஒரு சின்ன‌ ப‌ரிசோ கொடுக்க‌லாம். இது பிற‌ந்த‌ நாள் விழா போன்ற விழாக‌ளில் குழுவாக‌வும் விளையாட‌லாம். சரியாக‌ எண்ணைக் க‌ண்டுபிடித்த‌ குழ‌ந்தை முன்னே வ‌ர‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அதே இட‌த்தில் நிற்க‌ வேண்டும். யார் முத‌லில் வ‌ந்தாலும் அனைவ‌ருக்கும் ப‌ரிசு.

6. எண்ண‌ப் ப‌ழ‌குத‌ல் : ஒரு பூ அட்டைக‌ள் ம‌ட்டும் எடுத்துக் கொள்ள‌வும். சோழி அல்ல‌து புளிய‌ங்கொட்டை போன்ற‌ சிறு பொருள் ஒன்றை 45 எடுத்துக் கொள்ள‌வும். முத‌லில் குழ‌ந்தை 1 முத‌ல் 9 வ‌ரை வ‌ரிசையாக அடுக்க‌ வேண்டும். முடித்த‌வுட‌ன் அட்டைக்கு கீழே அத‌ன் ம‌திப்புக்கு அந்த‌ சிறு பொருளை வைக்க‌ வேண்டும். உதார‌ண‌த்திற்கு: 1 க்கு கீழே ஒரு சோழி, 2 க்கு கீழே இர‌ண்டு சோழி...

7. Number Matching: ஐந்து நிமிட‌ம் டைம‌ரில் வைத்துக் கொள்ள‌லாம். விளையாடும் அனைவ‌ரும் அட்டைக‌ளை ச‌ரிச‌ம‌மாக‌ பிரித்துக் கொள்ள‌வும். அட்டைக‌ள் முக‌ம‌திப்பு தெரியாம‌ல் திருப்பி வைத்திருக்க‌ வேண்டும். வ‌ரிசையாக ஒருவ‌ர் மாற்றி ஒருவ‌ர் ஒரு அட்டை (நாம் சீட்டு விளையாடும் பொழுது போடுவ‌து போல) போட்டுக் கொண்டே வ‌ர‌ வேண்டும். எப்பொழுது இரு அட்டைக‌ளின் எண்க‌ள் ஒரு மாதிரி இருக்கிற‌தோ, அப்பொழுது இர‌ண்டாம் அட்டை போட்ட‌வ‌ர் அனைத்து அட்டைக‌ளையும் எடுத்துக் கொள்ள‌ வேண்டும். உதார‌ண‌த்திற்கு : ந‌ப‌ர் 1, மூன்றாம் எண் அட்டையை போட்டார் என்று வைத்துக் கொள்வோம். ந‌ப‌ர் 2 டும் மூன்றாம் எண் அட்டையை போட்டார் என்றால் கீழே இருக்கும் அனைத்தையும் ந‌ப‌ர் 2 எடுத்துக் கொள்ள வேண்டும். ஐந்து நிமிட‌ முடிவில் முடித்து விட‌லாம்.

இன்னும் எத்த‌ணையோ வ‌ழிக‌ளில் விளையாட‌லாம். குழ‌ந்தைக‌ள் வெற்றி தோல்வியையும் ப‌ழ‌கிக் கொள்வார்க‌ள். சில‌ விதிமுறைக‌ளை பின்ப‌ற்ற‌வும் க‌ற்றுக் கொள்வார்க‌ள். சீட்டுக்க‌ட்டை எங்கும் எடுத்துச் செல்வ‌தும் எளிது.

இந்த‌ விளையாட்டுக‌ள் சிறு குழ‌ந்தைக‌ளுக்கு ஏற்ற‌து. ச‌ற்று பெரிய‌ குழ‌ந்தைக‌ளுக்கான‌ (ஆறு வ‌ய‌து முத‌ல்) விளையாட்டுக‌ளை இன்னொரு முறை எழுதுகிறேன். த‌ங்க‌ளுக்குத் தெரிந்த‌ க‌ணித‌ சீட்டுக்க‌ட்டு விளையாட்டுக‌ளை ம‌றுமொழியில் சொல்லுங்க‌ளேன்.

Monday, March 25, 2013

எங்க‌ள் வீட்டில் "பூத்த‌"ப் பூக்க‌ள்

இங்கு வச‌ந்த‌ கால‌ம் தொட‌ங்கி விட்ட‌து. இலைக‌ளின்றி பூக்க‌ளின்றி இருந்த‌ மர‌ங்க‌ளில் இலைக‌ள் முளைத்துள்ள‌ன, பூக்க‌ளுக்கும் அங்காங்கே தென்ப‌டுகின்ற‌ன‌. வீட்டில் செடி வைக்க‌ வேண்டும் என்று எங்க‌ள் அனைவ‌ரின் ஆசையும் ஏதாவ‌து ஒரு கார‌ண‌த்தால் முடியாம‌ல் போகின்ற‌து. சரி, வீட்டில் இய‌ற்கை பூக்க‌ள் இல்லையென்றால் என்ன‌, செய‌ற்கை பூக்க‌ள் செய்ய‌லாம் என்று நானும் தீஷுவும் செய்தோம்.

தேவையான‌ பொருட்க‌ள் :

1. காபி ஃபில்ட‌ர் பேப்ப‌ர் - ‍காபி மேக்க‌ரில் காபியை வ‌டிக‌ட்ட‌ ப‌ய‌ன்ப‌டுவ‌து.டிஸ்யூ பேப்ப‌ரிலும் செய்ய‌லாம் என்று நினைக்கிறேன்.

2. ஃபுட் க‌ல‌ரிங் ‍அல்லது பெயிண்ட்

3. ஸ்ட்ரா (Drinking straw)

4. ஸெல்லோ டேப் (Cellophane tape)


செய்முறை


1. காபி ஃபில்ட‌ரை க‌ல‌ர் செய்ய‌ வேண்டும். சிறிது நீரில் க‌ல‌ரிங் சேர்த்து, நன்றாக‌ க‌லக்க‌வும். அதில் ஃபில்டரை போட்டு ஐந்து நிமிட‌ம் ஊற‌ விட‌வும். ஒரு பூ செய்வ‌த‌ற்கு 3 முத‌ல் ஐந்து ஃபில்ட‌ர்க‌ள் தேவை.

2. ஃபில்ட‌ரை காய‌ வைக்க‌வும்.

3. காய்ந்த‌ ஃபில்ட‌ரை ந‌டுவில் க‌ட்டைவிர‌ல் ம‌ற்றும் ஆள்காட்டி விர‌ல் கொண்டு பிடித்து(விர‌ல்க‌ளின் ந‌டுவில் சிறிது அள‌வு ம‌ட்டும் வைத்திருக்க‌வும்), கீழிருந்து மேல் நோக்கி ம‌ற்றொரு கையினால் நீவினால் பூ வ‌டிவ‌த்தில் வ‌ரும்.

4. பிடித்திருந்த‌ விர‌ல்க‌ளை எடுத்து, பிடித்திருந்த‌ இட‌த்தில் முறுக்கி விட‌வும்.



5. அடுத்த‌ அடுக்குக்கு, ம‌ற்றுமொரு ஃபில்ட‌ரை எடுத்து, ந‌டுவில் க‌த்த‌ரிக்கோல் கொண்டு, சிறு துளை இட‌வும்.


6. நாம் செய்திருந்த‌ பூவை துளையில் நுழைத்து, மீண்டும் கீழிருந்து மேல் நோக்கி நீவினால் ச‌ற்று பெரிய‌ பூ கிடைக்கும். பிடித்திருந்த‌ நுனியில் முறுக்கிவிட‌வும்.

7 அடுத்த‌ அடுக்குக்கும், ம‌ற்றுமொரு ஃபில்ட‌ரில் துளையிட்டு, துளையினுள் செய்திருக்கும் பூவை நுழைத்து, கீழிருந்து மேல் நோக்கி நீவி, முறுக்க‌வும்.

8. முறுக்கி இருக்கும் ப‌குதியில் டேப்பினால் வெட்ட‌வும்.

9. பூ ரெடி. ச‌ற்று பெரிய‌ பூ வேண்டுமென்றால், இர‌ண்டு மற்றும் மூன்றாம் அடுக்குக்கு, இர‌ண்டு ஃபில்ட‌ர் உப‌யோக‌ப்ப‌டுத்த‌லாம்.

10. ஸ்ட்ராவில் டேப் வைத்து ஒட்டிவிட‌வும்.


நாங்க‌ள் கல‌ர் செய்யாத‌ வெள்ளை நிற‌த்திலும், சிவ‌ப்பு ம‌ற்றும் ம‌ஞ்சள் நிற‌த்திலும் செய்தோம். இந்த‌ வாடாத‌ வ‌ண்ண‌ ம‌ல‌ர்கள் தீஷுவிற்கு செய்வ‌த‌ற்கு எளிதாக‌ இருந்த‌ன‌.

பெரிய‌வ‌ர்க‌ள் செய்யும் வ‌ண்ண‌ம் ச‌ற்று க‌டின‌மான செய்முறைக‌ள் உள்ள‌ன. கூகுளின் துணை நாடினால் நிறைய‌ முறைக‌ள் க‌ற்க‌லாம்.

Friday, March 22, 2013

க‌ருப்பு வெள்ளைப் ப‌ட‌ங்க‌ள்

குழ‌ந்தை பிற‌ப்பத‌ற்கு முன்னால் க‌ருவிலிருந்தே க‌ற்கிறது என்ப‌து நாம் எல்லோரும் அறிந்ததே. குழ‌ந்தை பிற‌ந்த‌ பின் தன் ஐம்புல‌த்தினால் த‌ன்னை சுற்றியுள்ள பொருட்க‌ள் மூல‌ம் க‌ற்றுக் கொண்டே இருக்கும். ஐம்புல‌த்தில் ஒன்றான‌ பார்வை, பிறந்த‌ குழ‌ந்தைக்கு 8 முதல் 15 இன்ச் வ‌ரை ம‌ட்டுமே இருக்கும். அதுவும் க‌ருப்பு வெள்ளை போன்ற‌ கான்ட்ராஸ்ட் (contrast) வ‌ண்ண‌ங்க‌ள் கொண்ட‌ ப‌டங்க‌ள் ஈர்க்கும் என்று ப‌டித்திருந்தேன்.


தீஷுவிற்கு குழ‌ந்தை மேல் பிரிய‌ம் வ‌ர எந்த‌ பொருள் குழ‌ந்தைக்குச் செய்தாலும் தீஷுவை இணைத்துக் கொள்வேன்.முதலில் க‌ருப்பு வெள்ளை ப‌டங்க‌ள் கொண்ட‌ ப‌டங்க‌ள் இணைத்து குழ‌ந்தையின் முக‌த்திற்கு நேர் தொங்க‌ விட‌லாம் என்று
http://www.sleepingbaby.net/jan/Baby/mobile.html

என்ற‌ ப‌க்க‌த்திலிருந்து பிரிண்ட் அவுட் எடுத்து, அட்டையில் ஒட்டி, நூலினால் க‌ட்டிக் கொண்டோம். ஆனால் அட்டையில் ஒட்டிய‌தால், ச‌ற்று க‌ன‌மாக‌ இருந்தது. இங்கு ஆணி அடிக்க‌ முடிய‌வில்லை. தொங்கும் நூலை டேப் கொண்டு ஒட்டி விட்டோம். ஆனால் சிறிது நேர‌த்தில் விழுந்துவிட்ட‌து. முத‌ல் ப்ராஜெட்டே சொத‌ப்ப‌ல்.

தொங்க‌ விட‌ முடிய‌வில்லை என்ப‌தால் மேலும் சில‌ ப‌டங்க‌ள்

http://www.brillkids.com/free-download/infant-stimulation-cards.php

இருந்து பிரிண்ட் அவுட் எடுத்து குழ‌ந்தை ப‌டுத்திருந்த‌ ப‌டுக்கைக்கு அருகிலிருந்த‌ சுவ‌ரில் ஒட்டிவிட்டோம். பிரிண்ட் அவுட் எடுக்க‌ வேண்டும் என்று இல்லை. நாமே கூட‌ வ‌ரைய‌லாம்.

தீஷுவிற்கு நாமே ஏதாவ‌து செய்ய‌ வேண்டும் என்று ஆசை. வெள்ளை க‌ருப்பு பேப்ப‌ர்க‌ளை கொண்டு பேப்ப‌ர் வீவிங் முறையில் ஒரு ப‌டம் செய்து ஒட்டினோம். அது ச‌ம்முவிற்கு மிக‌வும் பிடித்திருந்த‌து.


அவ‌ள் அந்த‌ ஆர்ட்டிட‌ம் பேசும் வீடியோ



தீஷு அவளாக‌வே த‌ங்கைக்குச் சொல்லிக் கொடுக்கும் வீடியோ



முத‌ல் சில‌ மாத‌ங்க‌ளுக்கு முடிந்த‌ வ‌ரை இவ்வாறு ப‌ட‌ங்க‌ள் அவ‌ள் பார்வைப் ப‌டும் இட‌ங்க‌ளில் இருக்குமாறு பார்த்துக் கொண்டோம்.



Wednesday, March 20, 2013

முத‌ல் வ‌குப்பு

தீஷு முத‌ல் வ‌குப்பு ப‌டிக்கிறாள். மாண்டிசோரி முறையில் அல்ல‌.. ப‌ப்ளிக் ப‌ள்ளியில் ந‌ம் க‌ல்வி முறையில். இந்த‌ ஆண்டில் ஆங்கில‌ம், க‌ணித‌ம் ம‌ற்றும் அறிவிய‌லுக்கு மட்டும் முக்கிய‌த்துவ‌ம் த‌ர‌ப்ப‌டுகிற‌து. மேலும் க‌ணணி, இசை, விளையாட்டு ம‌ற்றும் நூல‌க‌ வ‌குப்புக‌ள் வார‌ம் ஒரு முறை உண்டு.

ஆங்கில‌ம் பொருத்த‌ ம‌ட்டில் வாசித்த‌லுக்கு மிகுந்த‌ முக்கிய‌த்துவ‌ம் த‌ர‌ப்ப‌டுகிற‌து. தின‌மும் 20 நிமிட‌ங்க‌ள் வாசித்து, புத்த‌கத்தின் பெய‌ரையும், புத்த‌க‌ம் பிடித்திருந்த‌தா என்றும் வீட்டுப்பாட‌த்தில் எழுத வேண்டும். தின‌மும் ப‌ள்ளியிலும் வாசிக்கிறார்க‌ள். ஸ்பெல்லிங் (Spelling) ஒவ்வொரு வார‌மும் 10 புதிய வார்த்தைக‌ள் வீட்டுப்பாட‌த்தில் இருக்கும். அது வியாழ‌ன் என்று பார்க்காம‌ல் எழுத‌ சொல்லி ம‌திப்பெண் உண்டு. அதுபோக க‌டின‌ வார்த்தைக‌ள் (Bonus words) என்று நான்கைந்து இருக்கும். அதுவும் டெஸ்டில் கேட்க‌ப்படும். ஆனால் மதிப்பெண் கிடையாது. ஒவ்வொரு வார‌மும் ஏதாவ‌து ஒரு த‌லைப்பில் எழுத‌ச் சொல்லி எழுத‌வும் ஊக்க‌மூட்டுகிறார்க‌ள்.

க‌ணித‌த்தில் ம‌ன‌க்க‌ண‌க்கு தான் முக்கிய‌ம். ஒர் இல‌க்க‌ கூட்ட‌ல் ம‌ற்றும் க‌ழித்த‌ல் 30 க‌ண‌க்கை 2 நிமிட‌த்தில் செய்ய‌ வேண்டும். 2 நிமிட‌ங்க‌ளில் செய்ய‌ ப‌ழ‌கி விட்டால் 1 நிமிட‌த்தில் செய்ய‌ வேண்டும். மேலும் ப‌ண‌ம் (Money), அள‌வு (Measurement) முத‌லிய‌ன‌ சொல்லிக் கொடுக்கிறார்க‌ள்.

அறிவிய‌லில் Living/Non living, Matters ம‌ற்றும் Weather ப‌ற்றி ம‌ட்டும் ப‌டிக்கிறார்க‌ள்.

வீட்டுப்பாட‌ம் வார‌ம் ஒரு முறை தான். திங்க‌ள் கொடுக்கும் வீட்டுப்பாட‌த்தை வெள்ளி அன்று திருப்பிக் கொடுத்தால் போதும். அதிக‌மும் இருக்காது. 5 ப‌க்க‌ங்கள் வ‌ரை இருக்கும். உட்கார்ந்து செய்தால் 1 ம‌ணி நேர‌த்தில் முடித்து விடலாம். ஆனாலும் தீஷு நான்கு நாட்க‌ள் செய்வாள்.

வெள்ளி மாலை த‌மிழ்ப் ப‌ள்ளி செல்கிறாள். த‌மிழில் மூன்று எழுத்து வார்த்தைக‌ள் எழுத்துக் கூட்டி வாசிக்கிறாள். இந்திய‌ வ‌ரும் பொழுது தேவைப்படும் என்று (பெங்க‌ளூரில் வசிக்க‌ப்போவ‌தால்) இந்தி சொல்லிக் கொடுத்தோம், கொடுக்கிறோம், கொடுப்போம்.. ஒவ்வொரு முறையும் இந்தி உயிர் எழுத்து முடித்த‌வுட‌ன் சிறிது இடைவெளி விடுவோம்..அடுத்த சில‌ நாட்க‌ள் க‌ழித்து உயிர் எழுத்து மறந்து மீண்டும் உயிர் எழுத்திலிருந்து ஆர‌ம்பிக்கிறோம்.

தீஷுவை மாண்டிசோரி ப‌ள்ளியில் சேர்க்காத‌தில் வ‌ருத்தம் எதுவும் இல்லை. டைம் டெஸ்ட், க‌ம்யூட்ட‌ரில் தேர்வு என்று அனைத்தையும் ப‌ழகிக் கொண்டாள். அவ‌ளுக்கு இந்த‌ முறையும் பிடித்திருக்கிற‌து. ஆசையாக‌ ப‌ள்ளி செல்கிறாள்.

Tuesday, March 19, 2013

After a short break...

சிறிது (?) இடைவெளிக்குப் பின் உங்க‌ளை ச‌ந்திப்ப‌தில் ம‌கிழ்ச்சி!!
இடைவெளிக‌ள் என‌க்கு புதிது இல்லை என்றாலும், இந்த நீண்ட‌ இடைவெளிக்குக் கார‌ண‌ம் ‍ ‍ ஒரு வ‌யது ஆகிற‌ ச‌ம்மு என்கிற‌ ச‌மி என்கிற‌ ச‌ம‌ன்விதா. எங்க‌ளை கிட்ட‌த்தட்ட‌ இந்த‌ ஒரு வ‌ருட‌ம் பிஸியாக‌ வைத்திருந்த‌ பெருமைக்குரிய‌வ‌ள்.
இந்த பதிவில் இனி தீஷுவுட‌ன் ச‌ம்முவும் இணைய‌ப் போகிறாள். நானும் தீஷுவும் ச‌ம்முவுட‌ன் விளையாடும் விளையாட்டுக‌ளையும் இனி ப‌திவு செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்.
ப‌திவுக‌ள் இடைவெளிக‌ள் இல்லாம‌ல் தொட‌ர‌ முடியுமா என்று தெரிய‌வில்லை ஆனால் நீண்ட இடைவெளிக‌ள் இல்லாம‌ல் பார்த்துக் கொள்ள‌ நினைத்திருக்கிறேன்.



 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost